100. அருள்மிகு பத்ரி நாராயணன் கோயில்
மூலவர் பத்ரி நாராயணன்
தாயார் அரவிந்தவல்லி
திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் தப்தகுண்ட தீர்த்தம்
விமானம் தப்தகாஞ்சன விமானம்
தல விருட்சம் பத்ரி (இலந்தை) மரம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார்
இருப்பிடம் திருவதிரியாச்சிரமம் (பத்ரிநாத்), உத்தராஞ்சல்
வழிகாட்டி தற்போது 'பத்ரிநாத்' என்று அழைக்கப்படுகிறது. உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள ரிஷிகேசத்திலிருந்து சுமார் 297 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Badrinath Temple Badrinath Moolavarஇங்கு நாராயணனே குருவாகவும், சீடனாகவும் இருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார் என்றும், அவர் பத்ரி (இலந்தை) மரத்தடியில் அமர்ந்ததால் 'பத்ரிகாசிரமம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். தப்தகுண்டம் என்னும் வெந்நீர் ஊற்றுக்கு எதிரே பத்ரி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி.

மூலவர் பத்ரி நாராயணன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சீதாபிராட்டி என்பது திருநாமம். மூலவர் சாளக்கிராம மூர்த்தி. இங்கு நடைபெறும் பூஜைகளுக்கு திரையிடப்படுவதில்லை. நரநாராயணர்களில் ஒருவரான நரனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

கோயிலுக்கு வடக்கே கங்கைக் கரையில் பிரம்ம கபாலம் என்ற இடம் உள்ளது. இங்கு பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோட்சமடைவதாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளது.

நாரதர் அஷ்டாச்சர மந்திரத்தால் மகாவிஷ்ணுவை பூஜித்து அருள்பெற்ற ஸ்தலம். இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும், அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. பீமனும், ஹனுமனும் சண்டையிட்ட கந்தமாதன பர்வதம் (தற்போது ஹனுமான்சட்டி) இங்கு உள்ளது.

பனிசூழ்ந்த இடத்தில் உள்ளதால் இக்கோயில் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்பட்டு 6 மாத காலம் வழிபாடு நடைபெறும். பின்னர் தீபாவளி அன்று கோயில் மூடப்படும். இந்த 6 மாத காலத்தில் இங்குள்ள உற்சவ மூர்த்திகளை பாண்டுகேஸ்வரர் என்ற ஊரில் உள்ள வாசுதேவர் கோயிலில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

திருமங்கையாழ்வார் 21 பாசுரங்களும், பெரியாழ்வார் 1 பாசுரமுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com